search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு முட்டை ஊழல்"

    தமிழகத்தில் சத்துணவு முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    விசாகப்பட்டிணத்தில் கப்பல் போக்குவரத்து துறை சார்பாக மத்திய மந்திரி நிதின்கட்காரி மற்றும் இணை மந்திரி மாண்டியா ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

    அப்போது ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் இருந்து 3000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. அந்த தண்ணீரை காவிரியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று நிதின்கட்காரி தெரிவித்தார்.

    ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை இருக்கிறது, அது தீரும் வரை தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திர மாநிலத்தில் தண்ணீர் இல்லாத நேரத்தில் கூட சென்னைக்கு தண்ணீர் கொடுத்தேன் என்றார்.

    ஜி.எஸ்.டி. குறித்தான தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுக்கக் கூடாது.


    தமிழகத்தில் முட்டையிலும் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. தமிழக மக்கள் முட்டையால் மொட்டை போடப்பட்டு இருக்கிறார்கள். முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்.

    பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் ஊழல் பெருகுகிறது என்றுதான் சொன்னார். ஏற்கனவே ஆண்ட அரசையோ, தற்போது ஆளுகின்ற அரசையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. தற்போது தேர்தல் கூட்டணி பற்றி சொல்ல முடியாது. அதற்கு வெகுநாள் இருக்கிறது.

    தி.மு.க. பெரிய ஊழலில் திளைத்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது பெரிய ஊழலில் இருந்துள்ளது. ஆனால் தி.மு.க. மத்தியில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தபோது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. சேருகிற இடத்தை பொறுத்துதான் சேருபவர்கள் இருப்பார்கள்.

    டாக்டர் ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைப்போல் வசனம் பேசுபவர்கள் கடைசி நேரத்தில் அதை மாற்றுவார்கள் என்று பார்த்து இருக்கிறோம்.

    அ.தி.மு.வை நடத்தும், அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள், ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக ஊழலை எதிர்க்கின்ற கட்சி. தூய்மை, நேர்மை வழியில் நடக்கின்ற கட்சி.

    நடிகர் கமல் தன்னை பகுத்தறிவாளன் என்றும் ஊழல், ஏழ்மையை ஒழிக்க அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். தமிழக மக்களை ஏழை ஆக்கக் கூடாது.

    பயங்கரவாதத்தை பற்றி நான் பேசியதால்தான் தமிழகத்தில் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் மத்திய துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசாலோ, தமிழக போலீசாராலோ கைது செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #EggNutritionCorruption
    ×